கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு.. 3 மாணவிகள் உட்பட 9 மாணவர்கள் கைது..!

சென்னை தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியில் வசித்தவர் பிரேம்குமார் (21). மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தத்துவவியல் இறுதி ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 17ம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்டார்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், கொலை செய்யப்பட்ட பிரேம்குமார், பதினைந்து வயதுடைய பள்ளி மாணவியர் இருவருடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களுடன் ஆபாசமாக பேசிய உரையாடலை பதிவு செய்துள்ளார். அதை வைத்து மாணவியரை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இந்த பிரச்னையில் இருந்து விடுபட, 17 வயதுடைய கல்லூரி மாணவியின் உதவியை பள்ளி மாணவியர் நாடியுள்ளனர். இன்ஸ்டாகிராம் நண்பரான கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (21) என்பவரை கல்லூரி மாணவி தொடர்பு கொண்டு, உரையாடல் பதிவு செய்துள்ள அலைபேசியை பெற்றுத் தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, பள்ளி மாணவியரை வைத்து தந்திரமாக நாடகமாடிய அசோக், கடந்த 17ம் தேதி மாலை, பிரேம்குமாரை செங்குன்றம் சுங்கச்சாவடிக்கு வரவழைத்தார்.
மாணவியரை வீட்டிற்கு அனுப்பி வைத்து, அசோக் மற்றும் அவரது கூட்டாளிகளான செங்குன்றம் லெவின் (22), ஜெகநாதபுரம் தமிழ் என்கிற பிரவின்குமார் (21), நெடுவரம்பாக்கம் ஜெகநாதன் (20), ஸ்டீபன் (21), ஆகியோர் பிரேம்குமாரை டூ வீலரில் கடத்திச் சென்றனர்.
பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு கொண்டு சென்று இரவு வரை பலமாக தாக்கினர். அதன்பின், அசோக்கும், லெவினும், பிரேம்குமாரை ஒரு டூ வீலரில் ஏற்றிக் கொண்டு கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈச்சங்காடு கொண்டு சென்றனர். அந்த இடத்தில், ஈகுவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்கிற மோசஸ் (28) என்பவரை வரவழைத்தனர்.
இதையடுத்து அசோக், லெவின், மோசஸ் ஆகியோர் இணைந்து பிரேம்குமாரை வெட்டிக் கொலை செய்து புதைத்து விட்டுச் சென்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பிரேம்குமாரை கொலை செய்த வழக்கில் பதிவான வாக்குமூலத்தின் அடிப்படையில், அசோக், லெவின், பிரவின்குமார், ஜெகநாதன், ஸ்டீபன், மோசஸ், இரு பள்ளி மாணவியர், கல்லூரி மாணவி என மொத்தம் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.