பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தல் - கல்லூரி மாணவி ஊசி போட்டு தற்கொலை..!
தூத்துக்குடியை சேர்ந்தவர் வியாபாரி சிவகுமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லவில்லை.
இதுகுறித்து அறிந்த சக மாணவிகள் அவரை தேடி விடுதி அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு சுகிர்தா மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பதற்றமடைந்த இருவரும் கல்லூரியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து சுகிர்தாவை பரிசோதித்த போது அவர் இறந்த அதிர்ச்சி தகவல் தெரிந்தது.
இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவட்டார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து சுகிர்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர்.
அதே சமயத்தில் கல்லூரி விடுதியில் மாணவியின் அறையில் போலீசார் சோதனை செய்த போது ஊசி மற்றும் மருந்து சிக்கியது. மாணவிக்கு சொந்தமான மடிக்கணினி, செல்போனையும் கைப்பற்றினர். மேலும் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக மாணவி எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என மருத்துவ மாணவி கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது. அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்” என்றனர்.
பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன் சுகிர்தாவுடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் திருவட்டார் வருவாய் ஆய்வாளர் அமுதா சார்பிலும் கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது.
ஊசி மற்றும் மருந்து போன்றவை மாணவி சுகிர்தா அறையில் சிக்கியதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தன்னுடைய உடலில் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தற்கொலை தொடர்பாக குலசேகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.