கேரி பேக்கிற்கும் சேர்த்து பணம் வசூல்..! ரூ.15,000 இழப்பீடு வழங்க ஜவுளிக்கடைக்கு உத்தரவு!

சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக் கடையில் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த 2023 ம் ஆண்டு 8,373 ரூபாய்க்கு துணிகளை வாங்கியுள்ளார். அதை எடுத்து செல்ல ஸ்ரீதருக்கு 2 பேப்பர் கேரி பேக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், பில்லிங் பிரிவில் அந்த கேரி பேக்குகளுக்கு 16 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அப்போது ஸ்ரீதர், கேரி பேக்கிற்கு இலவசம் என தெரிவித்து விட்டு அதற்கு 16 ரூபாய் வசூலிப்பதை ஏற்க முடியாது என அந்த கடையின் நிர்வாகிகளிடம் முறையிட்டார். அதற்கு அந்த ஜவுளிக் கடை நிர்வாகிகள் 16 ரூபாயை திரும்ப தர மறுத்து விட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ஸ்ரீதர், அந்த ஜவுளிக்கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
தொடர்ந்து சென்னை மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்வு ஆணையத்தில் ஸ்ரீதர் புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதித்துறை தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் ராமமூர்த்தி அமர்வு, கேரி பேக் இலவசம் அல்ல, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் பாதகைகளை வைக்க அறிவுறுத்தினர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், இலவசம் என கூறி பணத்தை வசூல் செய்தது முறையற்ற வணிகம் எனக் கூறி, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்காக 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 ஆயிரம் ரூபாயை 2 மாதத்தில் ஸ்ரீதருக்கு வழங்க அந்த ஜவுளிக் கடைக்கு உத்தரவிட்டனர். இழப்பீட்டை 2 மாதங்களுக்குள் வழங்க தவறினால் அந்த தொகையை செலுத்தும் வரை ஆண்டுக்கு 9% வட்டியுடன் இழப்பீட்டாக வழங்க நேரிடும் என்று எச்சரித்து வழக்கை முடித்து வைத்தனர்.