1. Home
  2. தமிழ்நாடு

காசு...! பணம்..! துட்டு..! மணி.. மணி ! குரங்கு கையில் 500 ரூபாய் நோட்டுகள்..!

11

கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த பகுதியாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. 'குணா' படம் வெளியான பிறகு பிரபலமான இந்த சுற்றுலாத்தலம். 'மஞ்சுமல் பாய்ஸ்' என்ற படம் வெளியான பிறகு மீண்டும் பிரபலமாகத் துவங்கியது. இதையடுத்து கடந்த கோடை சீசனில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற இடமாக குணா குகை பகுதி உள்ளது. இருந்தபோதிலும் குணா குகை பகுதி சர்ச்சைக்கு உள்ளான பகுதியாகவே உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்தவாரம் மெலிந்த தேகம் கொண்ட இளைஞர் ஒருவர் ரீல்ஸ் மோகம் காரணமாக தடுப்பு கம்பிவேலியை கடந்து சென்று ஆபத்தான பகுதியில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குணா குகை பகுதியை பார்வையிட வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தான் வைத்திருந்த பையில் 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களை வைத்திருந்துள்ளார். அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலாப் பயணிகள் கையில் வைத்திருந்த பையை பறித்துச்சென்றது. மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு பையில் இருந்து 500 ரூபாய் கட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு பிரித்து வீசியது.

குணா குகை பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மேல் 500 ரூபாய் தாள்கள் மழையாக பொழிந்தது. இதை கண்டு ஆச்சரியமடைந்த சுற்றுலாப் பயணிகள் மேலே பார்த்தபோது குரங்கு ஒன்று 500 ரூபாய் கட்டு ஒன்றை வைத்துக்கொண்டு பிரித்து வீசிக்கொண்டிருந்தது தெரிந்தது. பணப்பையை பறிகொடுத்த சுற்றுலாப் பயணியும் அவருடன் வந்தவர்களும் பொறுமையாக காத்திருந்து மேலிருந்து விழும் ரூபாய் நோட்டுக்களை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

மற்ற சுற்றுலாபயணிகளும் கீழே விழுந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்து கொடுத்து உதவினர். சில ரூபாய் நோட்டுக்கள் எடுக்கமுடியாத இடமான பள்ளத்தாக்கு பகுதிகளுக்குள்ளும் பறந்து சென்றது. குரங்கு ஒன்று மரத்தின் மீது அமர்ந்து கொண்டு 500 ரூபாய் தாள்களை வீசும் வீடியோ காட்சி இணையத்ததில் வைரலாகிவருகிறது.

Trending News

Latest News

You May Like