இன்ஸ்டாகிராம் பெண்ணை சந்திக்கச் சென்ற கோவை இளைஞர் குமுறல்...மொத்தமும் போச்சு..!

இன்ஸ்டாகிராம் மோகம் அனைத்து தரப்பினரிடமுமே அதிகரித்து வருகிறது. முன்பின் தெரியாத நபர்களை நம்பி பழகும் நிலையில் கடைசியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. காதல், நண்பர்கள், வியாபாரம், ஆன்லைன் முதலீடுகள், பங்குச் சந்தை என்ற பல்வேறு பெயர்களில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், கோவை, சூலூரில் உள்ள கல்லூரி மாணவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண்ணை சந்திக்கச் சென்றபோது மர்ம கும்பலிடம் சிக்கிய நிலையில், அந்த மாணவரைத் தாக்கியதோடு நகையையும் பறித்துச் சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் மணிகண்டன் (20), மதுக்கரை திருமலையாம் பாளையத்தில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். இவர், குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு லாவண்யா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் மணிகண்டனை தொடர்பு கொண்டு நட்பாகப் பேசி வந்துள்ளார். இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. லாவண்யா தான் பீளமேட்டில் தங்கியுள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு லாவண்யா, மணிகண்டனுக்கு போன் செய்து நான் திருப்பூரில் இருந்து சூலூர் வழியாக கோவைக்கு வந்து கொண்டிருக்கிறேன். உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, இன்ஸ்டாகிராம் காதலியை சந்திக்க மணிகண்டன் குஷியாக தயாராகியுள்ளார்.
லாவண்யாவை சந்திக்க சூலூருக்கு மணிகண்டன் வந்துள்ளார். காங்கேயம்பாளையம் அருகே உள்ள பிரியாணி கடைக்கு லாவண்யா அவரை வரச் சொல்லியுள்ளார். அங்கு சென்ற மணிகண்டனிடம் என்னுடைய தோழி ஒருவரின் வீடு அருகில் தான் உள்ளது. அவருடைய வீட்டுக்குச் சென்று விட்டு போகலாம் என்று கூறியுள்ளார். மணிகண்டனும் சரி என்று கூறவே பிரியாணி கடைக்கு பின்புறம் உள்ள குறுகிய சாலையில் லாவண்யா அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். லாவண்யாவும் அந்த கும்பலுடன் சேர்ந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மணிகண்டனின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், லாவண்யா மற்றும் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.