கோவை மருதமலை முருகர் கோயிலில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு..!

சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் மகேஷ்குமார் கூறியதாவது:-
கோவில் குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம், மூலவர் சன்னதி விமானம், முன் மண்டபம், படிக்கட்டில் உள்ள அனைத்து மண்டபங்கள், ஆதி சன்னதி மண்டபங்கள், உட்பட திருக்கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் வர்ணம் பூசும் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பெரும்பாலும் இந்தப் பணிகள் உபயதாரர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டமிட்டபடி ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது என்றார்.
கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்க்கிங் வசதிகள் குறித்து காவல்துறை துணை ஆணையர், கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
விழாவின் போது வாகனங்களை மலைப் பாதையில் அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் விழாவுக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால், மேலே பார்க்கிங் வசதி இருக்காது. அதோடு, மக்கள் அந்த இடத்தில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு இருக்காது.
எனவே, கோவில் நிர்வாகம் பிரத்யேக வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் இரவு முதலே வந்து தங்கி கும்பாபிஷேக நிகழ்வைக் காண்பார்கள் என்பதால் அவர்களுக்குரிய வசதிகளை கோவில் நிர்வாகமும், போலீசாரும் மேற்கொள்ள உள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களை படிக்கட்டுகள் மூலம் எப்படி அழைத்துச் செல்வது, எங்கெங்கு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் முழு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது