தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கோவை சிறுமி..! விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை..!
கோவையை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, கிருத்திகா தம்பதி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் பழனிச்சாமி அவர்களுக்கு 10 வயதில் பிரணவிகா என்ற மகள் உள்ளார். வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சத்தியமங்கலம் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் படம் பார்க்கச் சென்றுள்ளார்.
படம் தொடங்குவதற்கு முன்பாக தியேட்டரில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதில் “புகைப்பிடித்தால் புற்று நோய் உருவாகும் உயிரைக் கொள்ளும்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை பார்த்த பிரணவிகா இது குறித்து தனது தந்தையிடம் விசாரித்தார்.
மேலும், விளம்பரத்தில் எழுத்துப் பிழையுடன் வருவதால், அதைப் பார்க்கும் பல லட்சம் பேர் மற்றும் குழந்தைகளும், எழுத்துப் பிழையுடன் எழுத வாய்ப்பு இருப்பதாக நினைத்து தியேட்டர் மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர். "இந்தப் படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. அதை அவர்களால் மாற்ற முடியாது" என்றார். இதையடுத்து, வீட்டுக்கு வந்த மாணவி, எழுத்து பிழையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று காலை கடிதம் அனுப்பினார்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை பழனிச்சாமி கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க சென்றபோது, படம் தொடங்கும் முன் விழிப்புணர்வு உரையில் அச்சுப் பிழை இருப்பதாக மகள் கூறியதாகவும், அதை சரி செய்யாவிட்டால் அதைப் பார்க்கும் அனைவரும் ஒரே மாதிரியான எழுத்துப் பிழையுடன் எழுதுவார்கள், எனவே அதை மாற்றுமாறு எனது மகள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் தமிழை வளர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். துணை முதலமைச்சரும் சினிமாவில் இருந்ததால் அவருக்கும் இது பற்றிய புரிதல் இருக்கும். தட்டச்சுப் பிழையை உடனே மாற்றிவிடுவார்கள். மேலும், தனது மகள் கொரோனா காலத்திலும், மழை வெள்ளத்திற்காகவும் சேமித்து வைத்திருந்த தொகையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார் என பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.