1. Home
  2. தமிழ்நாடு

இனி இறந்த மணிக்கு நடந்த சம்பவம் போல வேறு எவருக்கும் நடக்காது - கோவை ஆட்சியர்..!

Q

மேட்டுப்பாளையம் பில்லூர் அணை அருகேயுள்ள வனப்பகுதி அருகே வரும் நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன் கோம்பை எனும் பகுதியில் மணி (48) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மேட்டுப்பாளையம அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 
இந்நிலையில் கடந்த 23ம் தேதி அவரின் உடல் அங்கிருந்து அவருடைய கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டபோது, நீரடி எனும் பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடம்பன் கோம்பைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், வாகனத்தை இயக்க மறுத்துவிட்டார். இதனால் நீண்ட கம்பங்களில் துணியை கட்டி, மணியின் உடலை ஊர்மக்கள் எடுத்து சென்றுள்ளார்கள்.
 
இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, செய்தி தொலைக்காட்சிகளில் அதிக மக்களால் பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் மையங்களில் கோவை கலெக்டர் பவன் குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 
 
இந்த ஆய்வுக்கு பின்னர் செய்திகளை சந்தித்தபோது, அவரிடமிருந்து சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். 
 
அதற்கு அவர் பதில் அளிக்கையில், இந்த சம்பவம் குறித்து கோட்டாச்சியர் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.மேலும் அங்கு சாலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
 
வனத்துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை அடுத்து செல்போன் டவர் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும், 2-3 மாதங்களில் அப்பகுதியில் அனைத்து பணிகளும் துவங்கும் என தெரிவித்தார்.
 
தமிழக அரசு விரைவாக இந்த இடத்தில் சாலைகளை அமைத்து இனி, இறந்த மணி என்பவருக்கு நடந்த சம்பவம் போல அந்த கிராமத்தில் எவருக்கும் நடக்காத படி அங்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News

Latest News

You May Like