1. Home
  2. தமிழ்நாடு

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி 'அல் உம்மா' பாட்ஷா காலமானார்! விசிக வன்னி அரசு இரங்கல்..!

11

1998 ஆம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்திருந்தது. கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரச்சாரம் செய்வதற்காக அத்வானி பிப்ரவரி 14ம் தேதி கோவை வர திட்டமிடப்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் கோவை மாநகரின் 12 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 56 பேர் உடல் சிதிறி உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1997 ஆம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கோவையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கலவரம் குண்டு வெடிப்பாக மாறியது. இந்த கோர சம்பவத்துக்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவற்றில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல் உம்மா இயக்கம் தலைவர் எஸ்.ஏ. பாஷா முக்கிய குற்றவாளியாக இருந்தார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக காரணமாக கடந்தாண்டு அக்டோபர் 19 மாதம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஷா பிணையில் வெளியில் வந்தார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு பாஷா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தார். ஆனாலும் அவர் உடல்நலம் சீராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக பாஷா அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. செயற்கை கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பாஷா உயிரிழந்தார்.

பாஷா பரோலில் இருந்து வந்தபோதே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னி அரசு அவரை நேரில் சந்தித்து உரையாடினார். பாஷா மறைவு குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இரங்கல்.. அய்யகோ எங்கள் பாஷா பாய் மரணித்தாரே. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார் அல்_உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா. 2007 ஆம் ஆண்டு பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை கொடுஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்.
 

80 வயதைக்கடந்த பாஷா கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலமின்றி சிறை விடுப்பில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6 மணியளவில் சிகிச்சையிலிருந்தவாறே மரணித்தார். இச்செய்தி பெரும் வேதனையையும், வலியையும் ஏற்படுத்துகிறது. கடந்தாண்டு சிறை விடுப்பில் வந்த அய்யா பாஷா அவர்களை அவரது கோவை இல்லத்தில் சந்தித்தோம். அத்தனை ஆரவாரத்துடனும், வாஞ்சையுடனும் ஆரத்தழுவி வரவேற்றார்.

சிறையிலிருந்த எந்த வலியையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக,அந்த காலத்தில் நடந்த பல வீர தீர சம்பவங்களை நினைவுப்படுத்தி பெருமையோடு பேசினார். துணிச்சல் மிகுந்த போராட்டத்துக்கு சொந்தக்காரர். தான் சார்ந்த முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உண்மையாக களமாடிய பெருந்தகை அவர். இரு நாட்களுக்கு முன்பு என்னோடு தொலைபேசியில் உரையாடினார். 'தம்பி வன்னி அரசு உங்களோடு பேச வேண்டும் போல இருந்தது. இப்போது போத்தனூர் மகள் வீட்டிலிருக்கிறேன். வந்து போங்க' என்றார். பேசி ஓரிரு நாட்களுக்குள் மறைந்து போனார். நான் மட்டுமல்ல, தலைவர் திருமாவளவனும் முஸ்லிம்களுக்கு உண்மையான தலைவர் என அய்யா பாஷா எப்போதும் பெருமையோடு பேசுவார். அப்படி விடுதலைச்சிறுத்தைகளை நேசித்த அய்யா பாஷா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like