சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்..!
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வருகை தருகின்றன. அந்த வகையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வருவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவிலிருந்து சென்னை வந்து, பின்னர் டெல்லி செல்வதற்காக ட்ரான்ஸிட் பயணி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதற்குள் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த பாரத் வசிஷ்டா (28) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த போதைப் பொருளை பரிசோதனை செய்ததில், அத்தனையும் விலை உயர்ந்த கொக்கைன் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடியிலிருந்து ரூ.25 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பயணியை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.