1. Home
  2. தமிழ்நாடு

நடுக்கடலில் 2 நாட்களாக தவித்த மீனவர்களை மீட்ட கடலோர காவல் படையினர்..!

1

வங்கக்கடலில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருந்தது. இது வலுப்பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மையமாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நெருக்கி வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல புயலாக மாற தொடங்கியுள்ளது. இதனால் சென்னை தொடங்கி தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை தமிழக கடற்கரை பகுதிகள் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அலையின் உயரமும், சீற்றமும் அதிகரித்துள்ளன. காற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், ஏற்கெனவே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ன மீனவர்கள் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பியிருந்தாலும் சில படகுகள் தற்போதுதான் திரும்ப தொடங்கியுள்ளன. இப்படி நேற்று கடலூர் மாவட்ட கடல் பகுதியில் கரை திரும்பிக்கொண்டிருந்த மீன் பிடி படகுகள் இரண்டு, ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்திருக்கிறது. கடலூர் தைகால் தோணித்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் 2 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றிருக்கின்றனர். ஆனால் கரை திரும்பும்போது கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இரண்டு படகுகளும் கவிழ்ந்திருக்கிறது. இதில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தள்ளதளித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக்கொண்டனர். தாங்கள் சிக்கிக்கொண்ட தகவலை கரையில் உள்ள உறவினர்களுக்கு பகிர்ந்த இவர்கள், உடனடியாக தங்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து நேற்று இரவு முதல் மீட்பு பணிகள் தொடங்கின. அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிக்கு படகுகளை பயன்படுத்துவது சாத்தியமற்றதாக தோன்றியது. எனவே ஹெலிகாப்டர் உதவி நாடப்பட்டது.

இன்று பிற்பகல் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மீனவர்கள் சிக்சியுள்ள பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக 2 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 4 மீனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது உறவினர்கள் மட்டுமல்லாது கடலூர் மாவட்ட மக்கள் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like