அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்.: முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்..!

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது தி.மு.க.,தான். 2024ல் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளது. கும்பகோணம்-மன்னார்குடி சாலைப் பணிகள் 90% முடிந்துள்ளன.
மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் வரவேற்பு வெளிப்படுத்துகிறது. இதனை எல்லாம் பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., புலம்பி கொண்டு இருக்கிறார். தன்னுடைய உட்கட்சி பிரச்னையையும், கூட்டணி பிரச்னையையும் மறைப்பதற்காக, இன்றைக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டு கொண்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையை ஒழுங்காக செய்திகளை படித்து வெளியிடுகிறாரா? என்றால் அதுவும் கிடையாது. அரசு சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கிறோம். அது உடனே டிவி நியூசில் வருகிறது. சோஷியல் மீடியாவில் வருகிறது. மறுநாள் எல்லா நியூஸ் பேப்பரிலும் வருகிறது. அப்போதும் செய்திகளை படிக்க மாட்டேன். பார்க்க மாட்டேன் என்று அடம்பிடித்து, அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்.,