வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 21ஆம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அப்போல்லோ மருத்துவமனை, “முதலமைச்சருக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது.
தொடர்ந்து எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மு.க.அழகிரி உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து, இரண்டாவது முறையாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையும் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. தொடர்ந்து முதலமைச்சர் சிகிச்சையில் இருந்தபடி காணொளி வாயிலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர்.
மேலும் நேற்று தமிழகம் வந்த பிரதமருக்கு கோரிக்கைகள் நிரம்பிய மனு ஒன்றையும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மூலம் அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுத்து, அதனை பிரதமர் மோடியிடம் அளிக்க செய்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். தொடர்ந்து அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.