மக்களின் 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக இருந்து வந்தது. இத்திட்டம் ரூ.1916.41 கோடி செலவில், பணிகள் நிறைவுற்று துவங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் முதல் பயன்பெறுகின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறும்போது, “3 தலைமுறைகளின் கனவுத்திட்டம், இன்று நனவாகிறது. விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் போராட்டக்குழுவினர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம். இந்த திட்டம் பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தியதால் தான், இன்றைக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தீர்த்த குடயாத்திரை, பாதயாத்திரை, குளம், குட்டை பயன்பெறும் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெயர்ப்பலகை திறப்பு விழா, கடந்த 2001-ம் ஆண்டு, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில், அத்திக்கடவு திட்டத்தின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தியது என, தொடர் போராட்டங்கள் மூலம் தான் இன்றைக்கு இந்த திட்டம் சாத்தியப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பிப். 8-ம் தேதி போராட்டக்குழு சார்பில் 12 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.27 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இந்த திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, ஓர் ஆண்டுக்கு முன்பே சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டது. ஆனால் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரி நீர் இல்லாததால், திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டன. தற்போது உபரி நீர் கிடைத்துள்ளதால், தமிழக அரசு இத்திட்டத்தை இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை சென்னையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்றால் என்ன?
அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் பவானி ஆற்றின், பில்லூரிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வறட்சி பாதித்த பகுதிகளை பசுமையாக்கும் திட்டமாகும். இந்த திட்டம் கொங்கு மக்களின் பல ஆண்டுகால கனவு திட்டம் என்று கூறலாம்.
இன்று இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவை என 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் இருக்கும் 31 ஏரிகள் மற்றும் ஆயிரத்து 45 குளங்கல் ஆகியவற்றில் தண்ணீர் தேக்கிவைக்கப்படும். இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய பயன்பாட்டுக்கான கிணறுகள், ஆழ்த்துளைக்கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். அதைப்போல, குடி நீர் பிரச்சனைக்கும் அத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர்த்தப்படும்.