1. Home
  2. தமிழ்நாடு

சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

Q

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையிலிருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார்.
அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதன் அருகில் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை வழங்கினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷாமிட்டல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசாரென 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Trending News

Latest News

You May Like