அரசுப் பள்ளி வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக். இவர் கடலாடி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் தீபக், இன்று காலை பள்ளி வகுப்பறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் , உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மாணவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தீபக்கின் உடல் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறையில் மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கடலாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் , தீபக் இன்று காலை 8 மணிக்கே பள்ளிக்கு வந்துவிட்டதாகவும், சோர்வாக காணப்பட்டார் என்றும், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், தீபக் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் அவரது பெற்றோர் தேடிக்கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தீபக்கின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆகையால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.