பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை வெளியீடு..!
பத்தாம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 ஆண்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பெண்களும், மாற்றுப் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர். இவர்களைத் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேர் தேர்வு எழுதினர். ஏப்ரல் 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருத்தும் பணிகள் முடிந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தன.
இதனையடுத்து திட்டமிட்டபடி, நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் போது, மாணவ, மாணவிகள் ஏற்கனவே தேர்வுத்துறைக்கு தெரிவித்திருந்த செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இத்துடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொது நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.