வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள் - இங்கிலாந்து பரபரப்பு குற்றச்சாட்டு..!

4 கோடி வாக்காளர்களின் தகவலையும், சில எம்பிக்களின் தகவல்களையும் சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் திருடியிருப்பதாக இங்கிலாந்து அரசு வெளிப்படையாக குற்றம்சாட்ட உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்தின் தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தை ஒப்புக் கொண்டது. 2021ம் ஆண்டு முதல் ஹேக்கிங் நடந்திருப்பதாகவும், நாட்டின் 4 கோடி வாக்காளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டிருப்பதாகவும் கூறியது. 2022 அக்டோபரில்தான் ஹேக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சைபர் திருட்டில் சீன அரசு நேரடியாக சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இங்கிலாந்து தேர்தல் ஆணையத்தின் சர்வர்களில் ஊடுருவி தகவல்களை திருடியுள்ளனர். மேலும் ஆணையத்தின் ஆவணங்களையும் அவர்கள் அணுகி உள்ளனர்.
இதன் மூலம் தேர்தல் முடிவுகளில் சீனா தனக்கு சாதகமாக மாற்றத்தை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதவிர, முன்னாள் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் இயன் டங்கன் ஸ்மித் உட்பட 4 எம்பிக்களின் தகவல்களையும் சீன ஹேக்கர்கள் திருடி உள்ளனர்.
இந்த எம்பிக்கள் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதிலும், சீன அரசின் உரிமை மீறல்களுக்கு கவனத்திற்கு கொண்டு வரும் சர்வதேச குழுவாகவும் செயல்படுபவர்கள்.
தற்போது இதுதொடர்பான தகவல்களை சேகரித்துள்ள இங்கிலாந்து அரசு அதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் முடிவு செய்துள்ளது. இதுதொரட்பாக துணை பிரதமர் ஆலிவர் டவுடன் நாடாளுமன்றத்தில் இன்று பேச இருப்பதாக சன்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அரசு நேரடியாக சீனாவுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ‘‘நாடுகள் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கும் போது, உண்மை அடிப்படையில் இல்லாமல், மற்றவர்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கக் கூடாது. எதையும் ஆதாரத்துடன் அணுக வேண்டும். சைபர் பாதுகாப்பு பிரச்னையை யாரும் அரசியலாக்கக் கூடாது. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்’’ என அறிவுரை கூறி உள்ளார்.