இன்று பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் வழங்கப்படாது - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
தேசிய அளவில் பல்வேறு முன்னணி தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஒருநாள் தேசிய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், ஒன்றிய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொது துறைகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், முக்கியமாக 44 தொழிலாளர் நல சட்டங்களில் 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி நான்கு தொகுப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும் சட்டம் திருத்தப்படுவதை கண்டித்தும், அந்த சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள், பல்வேறு சுயேட்சை தொழிற்சங்கங்கள், துறைவாரியான தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சிஐடியு, ஏஐடியுசி மற்றும் திமுகவைச் சேர்ந்த தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளது.
இன்று பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளன. எனவே இன்று அரசு அலுவலகங்கள் முறையாக இயங்குமா, பேருந்துகள் இயக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் மீறி பங்கேற்றால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோ வொர்க், நோ பே (No Work No Pay) என்ற அடிப்படையில் இன்று அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
நாளை பணிக்கு வராதவர்களின் பெயர் பட்டியலை காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளை பொது வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அரசு சேவைகள் தடையின்றி கிடைக்கும் என்றும், அரசு துறைகள் முழுமையாக இயங்கும் என்றும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.