1. Home
  2. தமிழ்நாடு

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 1,500 போலீஸ் பாதுகாப்பு..!

1

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. 

சென்னை கோட்டூர்புரத்தில் 2010 -ம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப் போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேசத் தரத்தில் நூலகம் மதுரையின் மற் றொரு அடையாளமாக கலைஞர் நூற் றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்குத் திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதியாக தற்போது 134 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 

அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இந்த நூலகத்தின் மூலம் பயன்பெறலாம். நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

 முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரிவும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப் பட்டுள்ளன. 

ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்படச் சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. 

கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை  (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். 

Trending News

Latest News

You May Like