இதற்காகவாவது முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கோவை வரவேண்டும் - வானதி சீனிவாசன்..!
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கோவை தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதல்வரின் கோவை வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதல்வர் கோவை வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. முதல்வர் வருகையையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன்.
பிராமண சமுதாயத்துக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதும் தவறாக பேசுபவர்கள் மீது பிசிஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிராமணர்களின் கோரிக்கையும் நியாயமானது.
‘அமரன்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.