சமாதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ..!

சமாதானத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து சான்றுகளையும் வழங்கினார்.
இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி சட்டசபையில் வெளியிட்டார். இந்த திட்டத்தால் சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கான வரி நிலுவைகளை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 50 ஆயிரத்துக்கும் குறைவாக நிலுவை வைத்துள்ள வணிகர்களின் நிலுவைத் தொகை வரி, வட்டி அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஒரு லட்சம் எளிய வணிகர்கள் பயன்பெறுவதுடன் ரூ.147 கோடி நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள வணிகர்கள் அரசின் சலுகை விவரங்களை அறிந்து அதற்கேற்ப நிலுவைத் தொகையை செலுத்தலாம்.
இதையொட்டி வணிகர்களுக்கான சமாதான திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முறைப்படி தொடங்கி வைத்து ரூ. 50 ஆயிரத்துக்கும் கீழ் நிலுவைத்தொகை வைத்துள்ள வணிகர்களில் 5 பேருக்கு தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமாதானத் திட்டம் 4 மாதங்கள் நடைமுறையில் இருக்கும். அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை வணிகர்கள் நிலுவைத் தொகையை சரிபார்த்து அதை விரைந்து செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.