1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு..! வங்கிக் கணக்கில் இன்னும் ஓரிரு நாளில்..

1

ஃபெஞ்சல் புயல் வரலாறு காணாத அதி கனமழை பொழிவை ஏற்படுத்தியது. இதனால் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன. வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டன.

இந்த புயலை கடுமையான இயற்கை பேரிடர் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் அறிவிப்பு வெளியிட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு வழங்கப்பட்டது.

மேலும், புயலால் பாதிப்பிற்குள்ளான உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு 80 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களை கணக்கெடுத்து,

மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-, நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000/-, நீண்ட காலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500/- என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்கு உள்ளான 3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அடுத்த ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like