முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்... ஏற்றார் எடப்பாடி பழனிசாமி!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (10.01.2025) பேசுகையில், “நாங்கள் கேள்வி எழுப்பினால் நாள்தோறும் ஒரு அமைச்சர் எனக்கு எதிராக அறிக்கை விடுகிறார்கள். கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தி.மு.க. மலிவான அரசியலைச் செய்கிறது. யார் இந்த சார் எனக் கேள்வி கேட்டால் ஏன் பதறுகிறீர்கள்?. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த பதற்றம்?. எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “நீங்கள் கொடுக்கும் அறிக்கைக்குத் தான் அமைச்சர்கள் பதில் கூறுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனை பெற்றுத் தரப்படும்.
நீங்கள் இதைப்பற்றியே பேசினால் நாங்கள் பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றிப் பேச வேண்டிவரும். பொள்ளாச்சி சம்பவத்தில் 2 வருடங்களுக்குக் கொடுமை நடந்தது. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்கள் கழித்தே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தீர்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார். எடப்பாடி பழனிசாமி தனது வாதத்தை நிரூபிக்காவிட்டால் நான் சொல்லும் தண்டனை ஏற்கத் தயாரா?. நான் சொல்வது தவறு என்றால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்கத் தாயார்” எனப் பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிக்கிறார். நான் சொன்னது தவறாக இருந்தால் முதல்வரின் சவாலை நானும் ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் பேசியதும் அவைக் குறிப்பில் பதிவாகியுள்ளது. எனவே மற்றவற்றை நாளை (11.01.2025) காலை பார்த்துக்கொள்வோம்” எனப் பேசினார்.