1. Home
  2. தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்..!

1

அக்னி நட்சத்திரம் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள சூழலில், தற்போதே வெப்பம் அதிகரித்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அவையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த சூழலில் மக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கோடை காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட முதல்வர், “வெப்பம் அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், மாணவ மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்திய முதல்வர், பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், நீரை தொடர்ந்து பருக வேண்டும். மோர், அரிசிக் கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு பருகவேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி துண்டு, தொப்பி குடிநீர் அணிந்துகொள்ள வேண்டும், சிறு பிரச்னை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன் என்ற அவர், “மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பந்தல்களில் மக்களுக்கு கூடுதலாக ஓஆர்எஸ் உப்புக் கரைசல் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் பொது சுகாதாரத் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், “அதிகரித்து வரும் கோடை வெயிலை எதிர்கொள்ள அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

Trending News

Latest News

You May Like