1. Home
  2. தமிழ்நாடு

இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!

1

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மேம்படுத்த, அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்று, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகிறது.

இதைக் கருத்தில் கொண்டே, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு, வெளிமாநிலப் பயணங்கள் அமைகின்றன. அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

2015-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2019-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோரால் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் பயணங்கள், அதிக அளவிலான முதலீடுகளுக்கு அச்சாரமிட்டன. இதுதவிர, பல பெரிய நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள், புதிய திட்டங்களுக்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில், தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்தார். அந்த இலக்கை நோக்கியே, இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்புரையாற்றுகிறார். அவரது முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், இந்த மாநாட்டில் ஒருடிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழகத்தின் பார்வை என்ற ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. டான்பண்ட் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையையும் வெளியிடுகிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகள் இம்மாநாட்டின் பங்குதாரர்களாக உள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களின் உற்பத்தி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. மாநாட்டில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

Trending News

Latest News

You May Like