50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்..!

தமிழ்நாட்டில் மேலும் 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி , முதல் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், காத்திருப்பு பட்டியலில் உள்ள மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, வரும் வியாழக்கிழமை திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் கலந்து கொள்ளவிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கி கவுரவிக்க உள்ளார்.