1. Home
  2. தமிழ்நாடு

இன்று திருவள்ளூரில் புதிய டைடல் பூங்கா திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

1

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடியில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2024) திறந்து வைக்கிறார்.

இக்கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இக்கட்டிடமானது, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிட வழிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது. பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த, குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். 

டைடல் பூங்கா திறப்பு விழாவின் போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதல்வர் வழங்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக ரூ. 18.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இப்பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக 18.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13.33 கோடி ரூபாய் மானியத்துடன் வடிவமைப்பு மையம், மறு பொறியியல் பரிசோதனைக் கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 14-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பொது வசதிகளை தமிழகத்தில்  உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

Trending News

Latest News

You May Like