முதல்வர் அவர்களே.. அம்மா உணவகத்தை மூடுங்கள்... வாலிபர் எடுத்த வீடியோவால் பரபரப்பு..!!

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகம் துவங்கபட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகில் ஒரு அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 10:30 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது கைப்பேசியில் வீடியோவை ஆன் செய்து அம்மா உணவகத்திற்கு சென்று அங்க வேலை பார்க்கும் ஊழியர்களை தரக்குறைவாக பேசிக் கொண்டே 500-க்கும் மேற்பட்ட இட்லிகள் புளித்த நிலையில் செய்யப்பட்டுள்ளது. இந்த இட்லியை சாப்பிட ஒரு நாயும் இங்கு வருவதில்லை. எனவே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி உதவி ஆணையர் அக்பர் அலியிடம் கேட்டபோது,
திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் அம்மா உணவகம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அவர் நேற்று காலை திடீரென அம்மா உணவகத்தின் உள்ளே சென்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை தரக்குறைவாக பேசியது மட்டும் அல்லாமல் இது போன்ற வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலக தொடர்பு கொண்டு இட்லி பரிசோதிக்க செய்தேன். இட்லி நன்றாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள் என்று கூறினார். எனவே வீடியோ எடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினார்.