முதல்வர் கோவை வருகை..! என்னென்ன நிகழ்ச்சிகள், எப்போது நடைபெறுகிறது? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த அப்டேட்..!
முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 5,6 ஆகிய தேதிகளில் கோவை வந்து சில முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். எனவே இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு, மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்னன் ஆகியோர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
கோவை செம்மொழி பூங்கா வளாகம் அருகே நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:
தமிழக முதலமைச்சர் நவம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விளாங்குறிச்சியில் தமிழக அரசின் எல்காட் சார்பில் கட்டப்பட்டுள்ள IT பூங்காவை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை கள ஆய்வு செய்கிறார்.
மறுநாள் 6ம் தேதி காலை 9.45 மணிக்கு செம்மொழி பூங்கா வளாகம் அருகே ரூ.300 கோடி மதிப்பில் 1.98 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்படவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார். இதில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கலை நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை கோவை ஆட்சியர் தலைமையில், கோவை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் செய்து வருகின்றனர் என கூறினார்.
முதலமைச்சர் வருகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்றார். இது IT பூங்கா திறப்பு மற்றும் நூலகம் & அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தான் என்று கூறினார்.
தீபாவளியில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு என்று கேட்டதற்கு, இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தகவல் தெரிவிப்பதாக கூறினார். ஏனென்றால் நேற்றும் விடுமுறை இன்றும் அரசு விடுமுறை என்பதால் விசாரித்து சொல்ல வேண்டும் என்றார்.