யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்துவிட்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் - அண்ணாமலை விமர்சனம்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் விக்னேஷ், செல்வபிரியா திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் எப்போதும் நட்பு உண்டு. இது தேர்தலுக்கான நட்பு அல்ல, கொள்கைக்கான நட்பு.வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி தொடரும். பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற தான் இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது.
மதத்தை வைத்து மதக்கலவரங்களை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்தும் வேளையில் பாஜக ஈடுபட்டுள்ளது. இந்தியா கூட்டணி அமைவதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் காரணமாக இருக்கிறதே என்கிற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துள்ளது.இதனால் சுதந்திர தினமோ, வெளிநாடுகளுக்கு சென்றாலோ திமுக கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? சிஏஜி அறிக்கை பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்கிறது. சிஏஜி அறிக்கையின் மூலம் ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன்படி பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவு பாதை கட்டுமான திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தி மேம்பாட்டு திட்டம்,கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், ஹெச்ஏஎல் விமான வடிவமைப்பு திட்டம் போன்றவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. பாஜக ஊழலை ஒழிக்க போவதாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டை அப்படியே படித்துவிட்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர்.சிஏஜி அறிக்கையால் மத்திய அரசின் ஏழு விதமான ஊழல் அம்பலமாகியிருக்கிறது என்று அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார். சிஏஜி அறிக்கையை இதற்கு முன் எப்போதாவது படித்துப் பார்த்திருப்பாரா முதலமைச்சர் என்ற கேள்வி எழுகிறது.
சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு மோசடி அல்லது முதல்வர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
14 வழிச் சாலையில், 8 வழி மேம்பாலமாகவும், 6 வழி விரைவுச் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதால் செலவினம் அதிகரித்துள்ளது என்பது சிஏஜி அறிக்கையிலேயே இருக்கிறது.எதற்காக இந்த மாறுதல் என்பதுதான் சிஏஜி அறிக்கையின் கேள்வியே தவிர, ஊழலோ முறைகேடோ நடந்துள்ளது என்று அறிக்கையின் எந்தப் பக்கத்திலும் கூறப்படவில்லை.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், சாலைகள் அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது தாமதமாவதால், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம் சாட்டினார்.
சாலை அமைப்பதற்கான மூலப் பொருள்களில் விலையுயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடமும் கேட்டுக் கொண்டார்.தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு, கேரளாவுக்கு அனுப்புவதில் திமுக அமைச்சர்களுக்கே தொடர்பு இருப்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு உதவாமல், கனிம வளங்களைத் திருடிக் கொண்டிருப்பவர்கள் மீது முதலமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
சுங்கச் சாவடியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். சுங்கச் சாவடிகளில் எப்படி ஊழல் நடக்கும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
உலக அளவில், ஊழலுக்கான அடையாளங்களாக விளங்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு, எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியும் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.எனவே, சுங்கச் சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை.
முதலமைச்சருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 2ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு மோசடி ,அரசுக்கு இழப்பு ஆகிய வார்த்தைகள் 2ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையில் தான் இருந்தது .
ஊழலின் அடையாளமான திமுக, ஊழலற்ற, மக்களுக்கான, நேர்மையான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.