இன்னும் 21 நாட்களில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு!

நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் பங்கு அளப்பறியது. தலைமை தேர்தல் ஆணையரை நாட்டின் குடியரசு தலைவர் நியமிப்பார். இவரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இருக்கிறது.
இவர்கள் தான் தற்போது பதவியில் இருப்பவரை காட்டிலும் அடுத்த நிலையில் இருக்கும் மூத்த தேர்தல் ஆணையரை பரிந்துரை செய்வர். அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது எட்டும் வரை பதவியில் இருப்பார். ஐஏஎஸ் கேடரில் இருக்கும் நபரை தான் பெரும்பாலும் தலைமை தேர்தல் ஆணையராக நியமிப்பர்.
கடந்த ஆண்டு அமலுக்கு வந்த புதிய சட்டத்தின் படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோரை தேர்வு செய்ய செயலாளர் அளவிலான அதிகாரிகள் 5 பேரின் பெயர்களை குழு பரிந்துரை செய்யும். அதன்படி தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சந்து ஆகியோர் நியமிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
தற்போது ராஜீவ் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். வரும் பிப்ரவரி 18ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். எனவே புதிய ஆணையரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூத்த அதிகாரிகள் சிலரது பெயர்களை பரிந்துரை செய்வர்.
இந்நிலையில் ராஜீவ் குமாருக்கு அடுத்தபடியாக ஞானேஷ் குமார் என்பவர் தான் மூத்த தேர்தல் ஆணையராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் வரும் ஜனவரி 26, 2029 வரை உள்ளது. எனவே இவரை இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.