சென்னை திரும்பினார் செஸ் உலக சாம்பியன் குகேஷ்..!
இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவுக்கே புகழ் பெற்று தந்திருக்கிறார்.
அவருக்கு அவ்வளவு எளிதாக இந்த வெற்றி கிடைத்துவிடவில்லை. இந்த ஒரு தருணத்திற்காக குகேஷும் அவருடைய குடும்பத்தினரும் பலவற்றை தியாகம் செய்துள்ளனர். குகேஷூக்கு 7 வயதாகும் போதே செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு உண்டானது. அதை தன்னுடைய பெற்றோரிடம் கூட பெற்றோரும் அவரை இந்த துறையில் ஊக்குவித்தனர்.
பெற்றோர் அவர் மீது வைத்த நம்பிக்கையும் குகேஷ் தன் மீது வைத்த நம்பிக்கையும் தற்போது சாத்தியமாகி உள்ளது. 18 வயதிலேயே இளம் செஸ் உலக சாம்பியன் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளார் குகேஷ். "ஏழு வயதில் செஸ் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது இருந்தே இந்த தருணத்திற்காக தான் நான் காத்திருந்தேன் என தெரிவித்துள்ள குகேஷ் அந்த சமயத்தில் இது என்னை பொருத்தவரை பெரும் கனவாக இருந்தது என கூறியுள்ளார்".
குகேஷ் இந்த உச்சத்தை அடைவதற்கு அவர் மட்டுமல்ல அவரது குடும்பத்தினரே பல்வேறு விஷயங்களை தியாகம் செய்ய வேண்டி இருந்தது. அவரது தந்தை ரஜினிகாந்த் ஒரு மருத்துவர். காது , மூக்கு, தொண்டை பிரிவில் அறுவை சிகிச்சை நிபுணர். குகேஷை செஸ் போட்டிக்காகவும் ஸ்பான்சர்ஷிப் பெறவும் பல இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டிய சூழல். எனவே ரஜினிகாந்த் தன்னுடைய மகனின் கனவுக்காக வேலையையே விட்டுவிட்டார். குகேஷின் தாயார் ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். குடும்ப பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டார். தன் ஒருவனுடைய கனவுக்காக குடும்பமே பல்வேறு நிதி ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்கிறார் குகேஷ்.
இந்நிலையில் இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தி, ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம்குளிர வைத்துள்ள குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி, முர்மு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்துளை தெரிவித்தனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நாடு திரும்புகிறார் உலக செஸ் சாம்பியன் குகேஷ். சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் இன்னோவா காரில் செஸ் சாம்பியன் குகேஷ் படத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் "The New King in.. The Kingdom of Chess" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.