இன்று சென்னை- திருவண்ணாமலை பயணிகள் ரயில் முழுமையாக ரத்து..!

ரயில் நிலைய பராமரிப்பு, ரயில் பாதை பராமரிப்பு, மின் பராமரிப்பு பணிகள் போன்ற பணிகள் அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும். எனவே இதற்காக ரயில் வழித்தடங்களில் சில ரயில்கள் முழுமையாகவும் அல்லது பகுதியாகவும் ரத்து செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில பயணிகள் ரயில்கள் பகுதியளவில் மற்றும் முழுமையாக இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காட்பாடி ரயில் நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி ரத்து செய்யப்படும் ரயில்
வரும் ஏப்ரல் 9 மற்றும் 11ம் தேதிகளில் (புதன் மற்றும் வெள்ளி) விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (எண்: 66026) வேலூர் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும். வேலூர் கண்டோன்மென்ட் முதல் காட்பாடி வரை பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
வரும் ஏப்ரல் 9 மற்றும் 11ம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் (எண்: 66033) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் ஏப்ரல் 10 மற்றும் 12ம் தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் பயணிகள் ரயில் (எண்: 66034) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.