#FairDelimitation வாசகத்துடன் ஒளிரும் சென்னை ரிப்பன் மாளிகை..!

நமது நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளாகவே 543 தொகுதிகள் தான் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தன. அதன்படி லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காகத் தொகுதி மறுசீரமைப்பை அதாவது டிலிமிட்டேஷனை மத்திய அரசு செய்யவுள்ளது. இருப்பினும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழீழத்திற்கு தற்போதுள்ள பிரதிநிதித்துவம் குறையும் என அஞ்சப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதே திமுகவின் குரலாக இருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது.
அடுத்தகட்டமாக இப்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைந்து தமிழக அரசு கூட்டம் நடத்துகிறது. சென்னையில் இன்று மார்ச் 22ம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளும் பங்கேற்க உள்ளது. குறிப்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர்.தனியார் நட்சத்திர ஹோட்டலில் இதற்கான கூட்டம் நடைபெறுகிறது. நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக ஏழு மாநில முதல்வர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் கேரளா, தெலுங்கானா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் நேரடியாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் சென்னை வந்துவிட்டனர். கர்நாடகா சார்பில் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர் இன்று காலை சென்னை வரவுள்ளார்.இது தவிர பிஜூ ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கிறார்கள். மேலும், ஆந்திராவில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இதில் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய் சீனிவாஸ் இதில் பங்கேற்கச் சென்னை வந்துள்ளார். ஜனசேனா கட்சி இப்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் சார்பில் மம்தா அல்லது அவரது கட்சி பிரதிநிதி யாராவது பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்று வெள்ளிக்கிழமை இரவு வரை எந்தவொரு பிரதிநிதியும் சென்னைக்கு வரவில்லை. இதனால் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகவே தெரிகிறது.
இதற்கிடையே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வாசகத்துடன் ஒளிரும் வகையில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.. #FairDelimitation என்ற வாசகம் இருக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.