1. Home
  2. தமிழ்நாடு

மின்வாரியத்தின் தவறை சுட்டிக்காட்டி 30000 இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி..!

Q

சென்னையைச் சேர்ந்தவர் ருக்குமணி. கடந்த 2023ம் ஆண்டு இவரது வீட்டுக்கு மின் கட்டணம் மிக அதிகமாக வந்துள்ளது. இந்த கட்டணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர், அவரது மின் கணக்கீட்டை சரிபார்த்து, மின்வாரிய அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர், மின்சார மீட்டர் நல்ல நிலையில், சரியாக தான் வேலை செய்கிறது, மின் கணக்கீட்டில் எந்த தவறும் இல்லை என்று கூறினர்.
அடுத்த 2 முறையும், மின் கட்டணம் கணக்கிடும் போது முன்பை போலவே அதிக முறை பயன்பாடும், கட்டணமும் வந்துள்ளது. எங்கோ எதிலோ தவறு இருப்பதாக உணர்ந்த அந்த பெண்மணி, உடனடியாக குறைநீர் மையத்தை நாடியுள்ளார்.
இதையடுத்து, அவர் வீட்டின் மின் மீட்டர் சம்பந்தப்பட்ட பரிசோதனைக் கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மீட்டரில் கோளாறு இல்லை என்று மீண்டும் அதே பதில் சான்றிளிக்கப்பட, ஏகத்துக்கும் குழம்பி போனார்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக லிமிடெட் அதிகாரிகள் கூறியபடி, வீட்டில் உள்ள மின் வயர்கள், இணைப்பு என அனைத்தையும் சோதனை செய்தார். அதில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மின்கசிவு இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் இதை மேற்கொண்டார்.
பின்னர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தப்படி கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு தமது வீட்டின் மின்சார மீட்டரை ருக்குமணி பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார். இப்போது 3வது முறையாக மீட்டர் பரிசோதிக்கப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவில் மின் மீட்டரில் கோளாறு இருப்பது உறுதியானது. இந்த காலக்கட்டத்துக்குள் ருக்குமணி, மின் கட்டணமாக ரூ.30,000 வரை செலுத்தி இருந்தார். ஆனால், எந்த சத்தமும் காட்டாமல், புதிய மின் மீட்டரை பொருத்திய மின்சார வாரியம், செலுத்தப்பட்ட மின்கட்டணம் பற்றி மூச்சுவிடாமல் இருந்துள்ளது.
தமக்கு ஏற்பட்ட இழப்பீடு மற்றும் சேவை குறைபாட்டுக்காக குறைநீர் மையத்தின் கதவுகளை தட்டினார் ருக்குமணி. அவரின் கோரிக்கையை விசாரித்த குறைதீர் ஆணையம், ரூ.30,000 இழப்பீடு வழங்க தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட்டது. தமது வீட்டின் மின் மீட்டர் பழுதானது என்பதை நிரூபிக்க நுகர்வோரான ருக்குமணி ஓராண்டு போராடி, அதற்கான இழப்பீட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like