சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி : குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது..!
தமிழ் நாட்டில் இன்றளவும் உயிர்ப்புடன் விளங்கும் ஒரே ஆறு காவிரி ஆறு ஆகும். இக்காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்குப் பிறகு அதிக அளவில் தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தக் கூடிய நன்னீர் ஆதாரமாக விளங்கக் கூடியதாக அமையப் பெற்றது கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி ஆகும். கடந்த ஆறு மாதங்களாக தென்னிந்தியாவில் பருவமழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், வீராணம் ஏரி தற்சமயம் வறண்டு காணப்படுகிறது.
இந்த வீராணம் ஏரியானது கடலூர் மாவட்டத்தில் 50,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாகவும் தற்போது விளங்குகிறது. எதிர்வரும் மழைக்கு முன்பாக வீராணம் ஏரியை தூர்வாரி, புணரமைத்து கரையை பலப்படுத்திக் கொண்டால் வரும் காலங்களில் அதிக அளவு தண்ணீரை ஏரியில் சேமித்து அதிக பயன்பெற முடியும். ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்ணை ஒரு மீட்டர் ஆழத்திற்கு அப்புறப்படுத்தி ஆழப்படுத்தியும் மேலும் அங்காங்கே உள்ள மன்மேடுகளை அகற்றவும் வேண்டும்.
தூர் வாருதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல், வட்டாட்சியர் அனுமதி மற்றும் சுரங்கங்களின் இணை இயக்குநர் அனுமதி என்று காலம் தாழ்த்தாமல், வீராணம் ஏரியைச் சுற்றிலும் அமைந்துள்ள காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி மற்றும் திருமுட்டம் தாலுக்கா ஆகிய நான்கு தாலுக்காக்களிலும் நிலம் வைத்திருக்கும் அனைத்து உழவர்களுக்கும் டிராக்டர்கள் மூலம் வண்டல் மண் எடுக்க பொதுவான முறையில் அனுமதி அளிக்க வேண்டும்.
மேற்கண்ட நான்கு தாலுக்காவை சேர்ந்த உழவர்களுக்கும் இந்த வீராணம் ஏரியில் பயன்பாட்டு மற்றும் பண்பாட்டு உரிமையும் உள்ளதால் வண்டல் எடுக்க அப்பகுதியை சார்ந்த உழவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள என்எல்சி போன்ற பெருநிறுவனங்களின் துணையையும் இணைத்துக் கொண்டு வரும் 3 மாதங்களுக்குள்ளாக தூர் வாரும் பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்கலாம். தற்செயலாக வரண்டு உள்ள வீராணம் ஏரியை விரைந்து தூர்வாரி புணரமைத்து நீராதாரத்தை பெருக்குவது அரசின் தலையாய கடமையாகும் என்கிறார் இயற்கை உழவர் க.சுரேஷ்குமார்.