சென்னை டூ இந்தோனேசியா.. ஏர்ஏசியாவின் புதிய திட்டம்..!

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர்ஏசியா இந்தோனேசியா, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
ஏர்ஏசியா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு இருந்தது, ஆனால் அதை டாடா குழுமம் கைப்பற்றிய நிலையில் தற்போது ஏர்ஏசியா இந்தோனேசியா முக்கியமான விரிவாக்கத்தைச் செய்ய உள்ளது. ஏவியேஷன்ஏ2Z வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தோனேசிய நாட்டின் முக்கிய நகரங்களை இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் புதிய திட்டத்தை தீட்டி வருகிறது ஏர்ஏசியா இந்தோனேசியா.
இந்தியாவில் இருந்து இந்தோனேஷியா நாட்டிற்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இணைப்புத் தேவையை வர்த்தகமாக மாற்ற முடிவு செய்துள்ளது ஏர்ஏசியா இந்தோனேசியா.
இத்திட்டத்தின் முதல் படியாக ஜகார்த்தா - சென்னை மற்றும் பாலி - கொல்கத்தா மத்தியிலான விமானச் சேவையைத் துவங்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் சமீபத்தில் இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இருதரப்பு ஒப்பந்தம் தான். இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையேயான நடப்புறவை மேம்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது. இதில் விமானப் போக்குவரத்து முக்கிய துறையாக உருவெடுத்துள்ளது.
இந்தியா - இந்தோனேஷியா நாடுகள் மத்தியில் வாரத்திற்கு 28 விமானங்கள் என்ற முந்தைய கட்டுப்பாடு, இருக்கை அடிப்படையிலான திறன் அமைப்பு மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு 9,000 பேருக்கு விமானச் சேவை அளிக்க முடியும். இந்த புதிய கட்டமைப்பு மூலம், சராசரியாக 180 இருக்கைகள் கொண்ட narrow-body aircraft-ஐ பயன்படுத்தி, தோராயமாக வாரத்திற்கு 50 விமானங்களை ஒரு வழிப் பயணத்தில் இயக்க முடியும். இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்துத் தான் ஏர்ஏசியா இந்தோனேசியா நிறுவனம் ஜகார்த்தா - சென்னை மற்றும் பாலி - கொல்கத்தா மத்தியிலான விமானச் சேவையைத் துவங்கத் திட்டமிட்டு வருகிறது.