இன்று நாளை மற்றும் திங்கள் சென்னை மாநிலக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

கடந்த 4-ம் தேதி மாநில கல்லூரி மாணவர் சுந்தர் (19) என்பவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கொடூரமாக தாக்கி விட்டு தப்பினர். ரூட் தல விவகாரத்தில் இந்த மோதல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இதில் முதலாம் ஆண்டு பயிலும் சுந்தர், கடந்த நான்காம் தேதி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இன்று காலை சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரியமேடு போலீஸார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோரை பெரியமேடு போலீஸார் ஏற்கனவே கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு அல்லிக்குளத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீஸார் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று 11 மணிக்கு மேல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் வரும் திங்கள் அன்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது
மேலும் இன்று உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்