சென்னை போலீசார் ஷாக்..! கீழ்ப்பாக்கம் சலூன் கடைக்குள் நுழைந்தால் 2 ஸ்வைப்பிங் மிஷின், 9 பெண்கள்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இங்கு, பெண்களை பணியில் அமர்த்தி, விபச்சாரங்கள் நடப்பதும் அதிகரித்து வருகின்றன.
குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகும் இளம்பெண்களை, இதுபோன்ற ஸ்பாசென்டர்களில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் போக்கு தொடர்கிறது. இதையடுத்துதான், தமிழக போலீசார், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் அடிக்கடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானால், அதன் உரிமையாளரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறார்கள்.. கடந்த வாரம்கூட, மயிலாப்பூர், சிஐடி காலனி, பிஷப் வாலர்ஸ் அவென்யூ (தெற்கு) பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தி, அதன் உரிமையாளர் கணேஷ்குமாரை கைது செய்ததுடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 6 பெண்களையும் போலீசார் பத்திரமாக மீட்டிருந்தனர். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா & சலூனில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த இடத்திலிருந்தும் 9 பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று முன்தினம் (15.02.2025) மதியம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் செயல்பட்டு வந்த ஸ்பா மற்றும் சலூனில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக அயனாவரம் ஈஸ்வர்ராவ் மகன் விஜயகுமார் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் ரூ.6,200/- 2 செல்போன்கள் மற்றும் 2 ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 9 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மேற்படி ஸ்பா மற்றும் சலூனின் உரிமையாளரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரி விஜயகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 9 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.