சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஏலம் - சென்னை காவல்துறை அறிவிப்பு..!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடிவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் கேட்பாரற்ற நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், அதன் விபரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சிலர் அபராதத்துடன் தங்களது வாகனங்களை பெற்றுச் சென்றனர். பலர் வாகனங்களை பெற முன்வரவில்லை. இதையடுத்து, உரிமை கோரப்படாத 953 இருசக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 973 வாகனங்களை ஏலம் விட போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக இந்த வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலத்திற்கான முன்பதிவு வரும் 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையினை மறுநாள் செலுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.