சென்னை மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க கோரிக்கை..!
திருவொற்றியூா் கிளை நூலகத்தில் திருவொற்றியூா் நல சங்கத்தின் வருடாந்திர பொது உறுப்பினா்கள் கூட்டம் கௌரவத் தலைவா் ஜி.வரதராஜன், தலைவா் என். துரைராஜ் ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாகா்கோயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க வேண்டுமானால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த வாகனங்களின் மூலமே எழும்பூரைச் சென்றடைய முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே, சென்னை மாநகரத்தில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் காலை 5 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரலில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்கும் வகையில் திருவொற்றியூரில் ஆந்திரா, ஒடிஸா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் விம்கோ நகா் ரயில் நிலையத்தில், நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
திருவொற்றியூா் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வட சென்னை கடற்கரைப் பகுதியை அழகு படுத்தும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கே.சுப்பிரமணி, குமாா் கோதண்டம், ஏ.முருகன், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.