தொடர்ந்து நீதிமன்ற படியேறினால் தான் சீமானுக்கு நிதானம் வரும் - சென்னை உயர் நீதிமன்றம்..!

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத் துரோகி என்றும், தேசத் துரோகி என்றும் பேசி வன்முறையைத் தூண்டியதாக கஞ்சனூர் போலீஸில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் சீமானுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது நீதிபதி, ‘‘வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பார்க்கும்போது மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது. மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்தும் அவருக்கு விலக்கு அளிக்க முடியாது.
சீமான் அரசியல் தலைவர்கள் குறித்து பேசும்போது நிதானமாகப் பேச வேண்டும். அடுத்தவரை எரிச்சலூட்டும் விதமாக பேசுவதையும், தனிப்பட்ட நபர்களைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவிப்பதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் இதேபோல பேசினால் வழக்குப்பதியத்தான் செய்வார்கள். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எல்லை மீறக்கூடாது.
வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து அவர் நீதிமன்றப் படியேறினால்தான் அவருக்கு நிதானம் வரும். இதுபோன்ற கருத்துகளை பேசக்கூடாது என அவருக்கு அறிவுறுத்துங்கள்’’ என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் கூறிய நீதிபதி பி.வேல்முருகன், சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.