சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..! இனி செப்டிக் டேங்கில் உயிரிழப்பு நேர்ந்தால் வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு..!

செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் வேலை செய்யும் ஊழியர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நிர்வாகத்தினர் ஈடுபட வைப்பதால் பல மரணங்கள் நிகழ்கின்றன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த யோகேஷ்பாபு ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், "எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டது. கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செம்டம்பர் 30-ந்தேதி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கினார். அப்போது அவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார். தகவல் கிடைத்ததும் வேலை செய்த இடத்தில் இருந்து நான் வீட்டுக்கு சென்றேன். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். முனுசாமி உடலை வெளியே எடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கினேன்.
இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3-வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவிக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், "தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்.
மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்து உள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்து உள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.