அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை..!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு , அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் , விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை? , விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 17-ம் தேதி ஒத்திவைத்தார். இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகாஷ் பாஸ்கரன் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஆகாஸ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவும் இடைக்கால தடை விதித்துள்ளனர்.