1. Home
  2. தமிழ்நாடு

சென்னை கூலிப்படை தலைநகராக மாறி உள்ளது. யாருக்கும் சென்னையில் பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை விமர்சனம்..!

1

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரம் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக 20 ஆண்டுகள் இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது இல்லத்தில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளோம். 

தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடைபெற்றது இல்லை. நடந்திருக்க கூடாது. ஒரு அரசியல் கட்சி தலைவர் சென்னையில் கூலிப்படையினால் படுகொலை செய்யப்படுவது இதுவே முதல்முறை. நேற்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பாஜக தலைவர்கள் தொண்டர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் இது குறித்து கேட்டறிந்தார்கள். நான் இலங்கைக்கு  ரா.சம்மந்தம் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்ததால் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன். நாளை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையில் 11 மணி அளவில் இது தொடர்பாக டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையிலான பாஜக மூத்த தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாளை சந்திக்க உள்ளனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து வேங்கை வயல் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வரை என 17 சம்பவங்களை பற்றி தேசிய பட்டியல் இன ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திடம் பாஜக சார்பில் முறையிட உள்ளோம். இந்த விசயத்தை சீரியசாக எடுத்துக்கொள்வோம்...படுகொலைக்கு யார் காரணம்? யார் பொருள் கொடுத்துள்ளார்கள்? என்பதை கண்டுபிடிப்பது தான் முக்கியம். சென்னை கூலிப்படை தலைநகராக மாறி உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் சென்னையில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது. முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என தெரியவில்லை.

சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற பிறக்கும் கூட முதலமைச்சர் வேகம் காட்ட வில்லை, முதலமைச்சரிடம் புலி பாய்ச்சல் இதுவரை இல்லை...இன்னும் ஆமை வேகத்தில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இப்போதாவது முதலமைச்சர் விழித்துக் கொண்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் சீர்திருத்தம் மேற்கொண்டு, காவல்துறை அடிப்படை பணிகளை வலிமை படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வரிடம் வைக்கிறேன். குற்றம் நடந்த பிறகு காவல்துறை மீது அழுத்தம் கொடுப்பது எப்படி? காவல்துறை மீது அழுத்தம் அளித்தால் மாநில காவல் அதிகாரிகளின் மாநிலமாக மாறிவிடும். தமிழகம் அப்படியாகிவிடக் கூடாது.  ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்த உடன் ஒரு பெரிய குற்றவியல் வழக்கறிஞரை தொடர்புக் கொண்டு குற்றவாளிகளை சமாதானம் செய்யக் கூறும் நிகழ்வுகள் நடக்கின்றன” எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like