முடிவுக்கு வந்த சென்னை ஈசிஆர் விவகாரம்.. தனியார் கல்லூர் சேர்ந்த மாணவர் கைது..!

சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறுத்து அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், முட்டுக்காடு அருகே வந்த போது இளைஞர்கள் 7,8 பேர் இரு கார்களில் வந்து எங்களை வழிமறித்து பிரச்சனை செய்தனர். அப்போது காரை நிறுத்தாமல் நாங்கள் சென்ற போது, வீட்டின் அருகே வந்து காரினை நிறுத்தினர்.
அப்போது நாங்கள் அவர்களின் காரினை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக பிரச்சனை செய்தனர். ஆனால் நாங்கள் அவர்களின் காரினை இடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பேசப்பட்டதால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்க்கப்பட்டது. அதேபோல் ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஏற்கனவே வெளியான வீடியோவில் இளைஞர்களின் முகம் தெளிவாக தெரிந்திருந்ததால், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று கார்களின் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்த ஒரு காரினையும், பொத்தேரியில் இருந்த மற்றொரு காரினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் இளைஞர் ஒருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில் விசாரணையின் முடிவில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்பின் மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.