தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு..!

தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதை முழுமையாக செயல் படுத்த முடியவில்லை.
இந்த நிலையில்,சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும். இதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.