தொடர் மழை : சென்னை கூவம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!
கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த தொடர் மழையால் நகரின் ஆறுகளான அடையாற்றிலும் கூவத்திலும் கொற்றலையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பொதுவாக ஓட்டமே இல்லாததுபோலக் காணப்படும் மூன்று ஆறுகளிலும் இரண்டு வாரங்களாக மழை நீர் பெருகி ஆற்றில் ஓட்டம் காணப்படுகிறது. சில நாள்களாக சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த்தேக்கங்கள் நிரம்பியநிலையில் அதன் போக்கு நீரும் கலங்கலும் சேர சென்னையை நோக்கி தண்ணீர் பெருக்கு எடுத்துள்ளது.
ஆங்காங்கே இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடுகிறது.
சென்னையின் பழைய நுழைவாயிலான மதுரவாயல்- கோயம்பேடு அருகில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து கூவம் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. தரைப்பாலத்தில் அருவியைப் போலத் தோற்றமளிக்கும் காட்சியை அவ்வட்டாரத்து மக்கள் காலையில் வேடிக்கைபார்த்துச் சென்றனர்.
பூந்தமல்லி சாலைக்குச் செல்லும் தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்துள்ளதால், வண்டிகள் செல்லத் தடைவிதிகக்ப்பட்டுள்ளது. இரு புறமும் காவல்துறையினர் அரண் அமைத்து அந்த வழியாகச் செல்வோரைத் தடுத்து திருப்பிவிட்டனர்.