சென்னை விமான நிலையமே பரபரப்பான சம்பவம் : ஒன்றல்ல...ரெண்டல்ல மொத்தம் 113 குருவிக்கள்.. 13 கிலோ தங்கம் கடத்தல்..!

மஸ்கட்டில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பல்வேறு பொருட்கள் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் சம்பந்தப்பட்ட விமானத்தை கண்காணிக்க தொடங்கினர். அந்த விமானத்தில் மொத்தம் 186 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்களில் யார் கடத்தலில் ஈடுபட்டது என்பது தெரியாததால், அவர்களை நிறுத்தி, பல மணி நேரம் விசாரணை ஆரம்பமானது. அதில், 73 பேர் கடத்தல் விவகாரங்களில் தலையிடாதவர்கள் என்பது உறுதியானது. அதனால், மற்ற 113 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி, அதில் கடத்தலில் ஈடுபட்டது யாராக இருக்கும் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, ஆடைகளை களைந்து முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. இதற்கே பல மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால், போலீசாருக்கே சற்று அதிர்ச்சிதான். ஆனால், பெரிய அளவில் தங்கம் கடத்தப்பட்டதாக, சுங்கத்துறை எந்த தகவலையும் விசாரணையில் வெளியிடவில்லை. இவர்கள் எல்லோருமே தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார்கள்.
தங்களது உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப்பசைகள் என புது புது டிசைன்களில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களது சூட்கேஸ், பைகளை சோதனையிட்டதில், நிறைய ரகசிய அறைகள் இருந்தன. அவைகளில் 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்புகள் என மறைத்து வைத்திருந்தனர். இதில் தங்கம் மட்டும், மொத்தம் 13 கிலோ இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 14 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, அவர்களை ஜாமீனிலும் விடுவித்தனர்.113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் என்பது ஊர்ஜிதமானது. ஆனால், இவர்களை இயக்கும் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவர்கள் யார்? சம்பந்தப்பட்ட விஐபிகள் யார்? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.